நத்தம் அருகே பெட்டிக்கடையில் பதுக்கிய 1,407 மதுபாட்டில்கள் பறிமுதல் - கடை உரிமையாளர் கைது!

 
liquor liquor

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1,407 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர்.  

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி, நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில், உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நத்தம் அரவக்குறிச்சி அருகே பட்டிக்குளம் பகுதியில் மாணிக்கம் (55) என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

liquor

அப்போது, அங்கு விற்பனை செய்வதற்காக பெட்டி பெட்டியாக ஏராளமான மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கடையில் இருந்த 1,407 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது தொடர்பாக கடை உரிமையாளர் மாணிக்கத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.