மணப்பாறை அருகே விஷம் கலந்த அரிசியை தின்ற 15 மயில்கள் பலி; தோட்ட உரிமையாளர் கைது!

 
peacock

திருச்சி அருகே தனியார் கடலைக்காட்டில் விஷம் கலந்த அரிசியை தின்ற 15 மயில்கள் உயிரிழந்த சம்பவத்தில், தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த முகவனூர் தெற்கு முத்துக்கருப்பண்ணப்பிள்ளை குளம் பகுதியில் உள்ள தனியார் கடலைக்காட்டில் 8 பெண் மயில்கள் உள்ளிட்ட 15 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவலின் பேரில் வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடலைக்காட்டில் பல்வேறு இடங்களில் தீவணமாக அரிசி வைக்கப்பட்டு இருந்ததும், அதனை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்தும் தெரிய வந்தது. 

arrest

தொடர்ந்து, வனத்துறையினர் இறந்த மயில்களின் உடல்களை மீட்டு பொத்தப்பட்டி கால்நடை மருந்தகத்தில் அவற்றுக்கு மருத்துவர்கள் ரமேஷ், மாரிமுத்து ஆகியோர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மயில்களின் உடல்கள் முகவனூர் காப்புக்காடு பகுதியில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடலைக்காட்டின் உரிமையாளர் அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த பிச்சை(80) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, தனது தோட்டத்தில் எலி தொல்லை காரணமாக வைத்த விஷம் கலந்த அரிசியை, தவறுதலாக மயில்கள் திண்றதால் அவை உயிரிழந்து விட்டதாக பிச்சை தெரிவித்தார். தொடர்ந்து, பிச்சையை வனத்துறையினர் கைதுசெய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். விஷம் கலந்த அரிசியை தின்று 15 மயில்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.