புதுக்கோட்டை இளைஞரிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.2.03 லட்சம் மோசடி; டெல்லியை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது!

 
pdkt

புதுக்கோட்டை இளைஞரிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி இணைய வழியில் ரூ.2.03 லட்சம் மோசடி செய்த, டெல்லியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 5 பேர் கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் கனிகுமார். கடந்த ஜுலை மாதம் இவரது செல்போனுக்கு 1 சதவீத வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த எண்ணிற்கு கனிகுமார் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் ரூ.5 லட்சம் கடன் பெற்று தருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து வங்கிக்கணக்கு விபரங்கள், ஆதார் உள்ளிட்ட விபரங்களை சேகரித்த அவர்கள், கடன் பெறும் பணிகள் தொடர்பாக பல்வேறு தவணைகளில் ரூ.2,03,100-ஐ பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் கூறியபடி கடன் வாங்கித்தரவில்லை.

pdkt

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கனிகுமார், இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், கனிகுமாரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் டெல்லியை சேர்ந்த ரகுபதி(30), முகமது எஸ்தாக்(24), முகமது சாபிஆலம்(43), செல்வா(25) மற்றும் தேவா என்பவரது மனைவி பிரியா(36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு சென்று, 5 பேரையும் கைது செய்து புதுக்கோட்டைக்கு நேற்று அழைத்து வந்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், 6 ஸ்மார்ட் போன்கள், 16 பட்டன் செல்போன்கள், 2 சிம் கார்டுகள், 9 வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டு, ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களது வங்கி கணக்கில் இருந்த 67 ஆயிரம் பணமும் முடக்கப்பட்டது. தொடர்ந்து, கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.