பெருந்துறையில் வீடு புகுந்து நகை திருடிய பெண் உட்பட 2 பேர் கைது!

 
arrest

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குழந்தையுடன் விளையாடுவது போல நடித்து 5 பவுன் நகையை திருடிய பக்கத்து வீட்டு பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அக்ரஹார வீதியை சேர்ந்தவர் ஆரோக்கிய கில்பர்ட். இவர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ஜெனிபர். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். ஜெனிபர், தனது 5 பவுன் நகையை வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்தார். அதன் சாவியை அருகிலேயே வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி புதிதாக வாங்கிய தங்க டாலரை வைப்பதற்காக, ஆரோக்கிய ஜெனிபர் பீரோ லாக்கரை திறந்தபோது, உள்ளே இருந்த நகைகள் மாயமாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.

perundurai

இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய ஜெனிபர், இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி குழந்தையை வீட்டுக்குள் விட்டு விட்டு, ஜெனிபர் வெளியே செல்வதும், அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமதி என்பவர் வீட்டுக்கு வந்து குழந்தையுடன் விளையாடுவதும் தெரியவந்தது. இதனால், கோமதி மீது சந்தேகமடைந்த போலீசார்,  இதுகுறித்து கோமதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், திருடிய நகையை, பெருந்துறையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடம் கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், கோமதி மற்றும் சுரேஷ் குமாரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடுபோன நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுதப்பட்டு, கோமதி கோவை பெண்கள் சிறையிலும், சுரேஷ்குமார் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.