ராமநாதபுரத்தில் சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 
ration rice

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் ரேஷன் அரிசியை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை ராமேஸ்வரம் கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ரெகுநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை சென்ற சரக்கு வேனை போலீசார் மறித்து சோதனையிட முயன்றனர். ஆனால், ஒட்டுநர் வேனை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வேனை துரத்திச்சென்றனர். அப்போது, உத்திரகோசமங்கை சாலையில் வேனை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

ramanathapuram

இதனை அடுத்து, போலீசார் வேனில் சோதனையிட்டபோது அதில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 50 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்து, கீழக்கரை கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.