துறையூர் அருகே 20 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

 
peacock dead

துறையூர் அருகே தனியார் விவசாய நிலத்தின் அருகே 20 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி பகுதியில் நேற்று தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே 20 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வன், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், வனச்சரகர் கோபி தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, 15 பெண் மயில்களும், 5 ஆண் மயில்களும் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.

peacock dead

இதனை அடுத்து, அரசு கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் உயிரிழந்த மயில்களுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அவை அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிலத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.