சேலம் வழியாக ரயிலில் கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

சேலம் வழியாக சென்ற ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்திவந்த 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ரயில்வே போலீசார், போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் ரயில்வே போலீஸ் தனிப்படையினர், நேற்று தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்தது.

salem

இதுகுறித்து பயணிகளிடம் விசாரித்தபோது, அது தங்களுடையது இல்லை என கூறினர். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும், கஞ்சாவை கடத்திவந்த நபர் குறித்த விபரம்  தெரியவில்லை. இதனை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.