நாகையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பறிமுதல்!

 
sea cards

நாகை அக்கரைப்பேட்டையில், வெளி நாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான  கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர், அக்கரைப்பேட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

sea horse

அப்போது, அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏராளமான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள் மற்றும் கடல் குதிரைகள் ஆகியவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கிருந்து 1060 கிலோ கடல் அட்டைகள், 15 கிலோ  சுறா மீன் இறக்கைகள் மற்றும் 4 கிலோ கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.

பின்னர், அவை நாகை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய விசாரணையில், நாகையை சேர்ந்த  முருகானந்தம் என்பவர் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக அவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தப்பியோடிய முருகானந்தத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.