ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் 2,200 லி. சாராய ஊறல்கள் அழிப்பு... எஸ்.பி. பவன்குமார் அதிரடி!

 
illicit arrack

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் 2200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அவை தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர் மலைப் பகுதிகளில், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார், அவ்வப்போது திடீர் சோதனைகள் மேற்கொண்டு, கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,பவன்குமார் தலைமையில், திருவண்ணாமலை டவுன் ஏடிஎஸ்பி கிரண்ஸ்ருதி, டிஎஸ்பி-க்கள் குணசேகரன் (போளூர்), ராஜா (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), ரமேஷ் (சமூக நீதி, மனித உரிமைகள்) மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜமுனாமரத்தூர் மலைப்பகுதி முழுவதும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

illicit arrack

இந்த நிலையில், ஜமுனாமுத்தூர் மலைப் பகுதியில் மேல் நம்மியம்பட்டு மலைப் பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊறலும், பால்வாடி பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 2,200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சாராய ஊறல்களை தரையில் கொட்டி போலீசார் அழித்தனர். அத்துடன், ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு துப்பாக்கிகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்