காட்பாடியில் ரயிலில் கடத்திவரப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 வடமாநில இளைஞர்கள் கைது!

 
cannabis

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயிலில் கஞ்சா கடத்திவந்த 2 வடமாநில இளைஞர்களை கைதுசெய்த ரயில்வே போலீசார், அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து பெங்களுரு வரை செல்லும் விரைவு ரயில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-7  பெட்டியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பயணிகள் இருவரது உடமைகளை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 2 பைகளில் பண்டல் பண்டலாக கஞ்சாவை மறைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

katpadi

இதனை அடுத்து, 24 பண்டல்களில் இருந்த 24 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக ஜார்க்கண்டை சேர்ந்த டிக்கல் சமாத்(20), மற்றும் சாலுகா கொராவ்(28) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து,  2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.