அரக்கோணம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர்... வெள்ளத்தில் சிக்கிய 25 பேர் பத்திரமாக மீட்பு!

 
flood

அரக்கோணம் அருகே ஏரியில் வெளியேறிய உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 25 இருளனர் இன மக்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கணபதி புரம் ஏரி அமைந்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணாக  ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர், நேற்று அருகில் இருளர் இன மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து கொண்டது. கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றதால் பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

flood

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி பத்திரமாக மறுகரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவர்கள் அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.