வாகனஓட்டிகளிடம் கூகுள்பே மூலம் லஞ்சம் பெற்ற 3 காவலர்கள் பணியிட மாற்றம் - கோவை எஸ்.பி. நடவடிக்கை!

 
transfer

கோவை மாங்கரை சோதனைச்சாவடியில் வாகனஓட்டிகளிடம் கூகுள்பே மூலம் லஞ்சம் பெற்ற தலைமை காவலர் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. செல்வநாகரெத்தினம் உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பெண்கள் வாழை நாரில் இருந்து யோகாசன பாய்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசன பாயின் ஓரப்பகுதிகளை தைக்க சின்ன தடாகத்தை சேர்ந்த ஐயப்பன் என்ற டெய்லரிடம் கொடுத்திருந்தனர். அதன்படி, ஐய்யப்பன் யோகாசன பாய்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றபோது, மாங்கரை சோதனைச்சாவடியில் இருந்த காவலர்கள் ஐய்யப்பனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.  

cbe sp

அப்போது, பாயுக்கு உரிய ரசீது காண்பிக்காததால் ஐய்யப்பனிடம் இருந்த ரூ.1500 மதிப்பிலான யோகாசன பாய்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், புகார் குறித்து விசாரிக்க  பெரியநாயக்கன் பாளையம் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சோதனைச்சாவடியில் பணியில் இருந்த துடியலூர் காவல் நிலைய தலைமை காவலர் முத்துசாமி பாயை பறித்தது தெரியவந்தது.

மேலும், அங்கு பணியில் இருந்த பாட்டாலியன் காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்று வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, பாயை பறித்த தலைமை காவலர் முத்துச்சாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும், காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரை பாட்டாலியனுக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார்.