விழுப்புரம் அருகே வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது; ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 
vilupuram

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று அதிகாலை கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமலைராயபுரம் பகுதியில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் பயிற்சி டிஎஸ்பி நமச்சிவாயம், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 சரக்கு வேன்களை போலீசார் மறித்து சோதனையிட்டனர்.

vilupuram

அப்போது, அந்த வேன்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக வேனில் இருந்த வெள்ளம்புத்துரை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன்(46), மூர்த்தி(43) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வெள்ளம்புத்துரில் உள்ள இருவரது வீடுகளிலும் பதுக்கி வைத்திருந்த ஏராளமான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குட்கா கடத்தலில் தொடர்புடைய மணிகண்டன்(46), மூர்த்தி(43)  மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி ஆகிய 3 பேரை கைதுசெய்த கண்டாச்சிபுரம் போலீசார், அவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.5 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.