விழுப்புரத்தில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த 3 பேர் கைது!

 
vilupuram

விழுப்புரத்தில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் விழுப்புரம் 4 முனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்திச்சென்றது தெரியவந்தது.

vilupuram

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 25 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மற்றும் 5.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கடத்தியது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் படாளம் பகுதியை சேர்ந்த உக்ரேஷன் பாரிக், புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த அஜய்குமார், பல்ராம் பாரிக் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்காவை விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.