கோவையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது... 300 மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்!

 
cbe

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் ரயில்வே பாலம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர்.  அவர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, 3 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

painkillers

அதில் அவர்கள் கணுவாய் பகுதியை சேர்ந்த அசாருதீன்(24), இடையர்பாளையத்தை சேர்ந்த சகாய விஜய்(26) மற்றும் வடவள்ளியை சேர்ந்த கோகுல்(24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போதை ஏற்படுத்தக்கூடிய 300 வலிநிவாரணி மாத்திரைகள், அவற்றை உடலில் செலுத்த பயன்படுத்தும் ஊசிகள், 525 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 88 ஆயிரம் ஆகும். தொடர்ந்து, 3 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.