வலங்கைமான் அருகே தனியார் குடோனில் பதுக்கிய 3 டன் குட்கா பறிமுதல்... தலைமறைவான குடோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை!

 
valangaiman

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 3 டன் குட்கா புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆவூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்படை போலீசார் ஆவூர் அருகே உள்ள ரகுமானியா நகரில் உள்ள தனியார் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பண்டல் பண்டலாக ஏராளமான குட்கா, பான்மசலா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கிருந்த சுமார் 3 ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

thiruvarur

நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா, வலங்கைமான் காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், குட்காவை பதுக்கியது, ஆவூர் கடை தெருவில் மளிகை கடை நடத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அம்மாபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் ஜமாலுதீன்(42) மற்றும் சர்புதீன் மகன் பாதுஷா(29) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலங்கைமான் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.