பெரியநாயக்கன்பாளையம் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 4 பேர் கைது !

 
cannabis

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே காய்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த 4 பேரை கைதுசெய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பசுமணி பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு உள்ளதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்  பெரியநாயக்கன் பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்தில், கஞ்சா செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது.

cannabis

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா செடிகளை பயிரிட்டது, அதே பகுதியை சேர்ந்த செல்லன்(60), பழனிசாமி(60), ராஜப்பன்(33) மற்றும் வேலுசாமி(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், தோட்டத்தில் பயிரிடப்பட்ட 15.3 கிலோ எடையிலான 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பழங்குடி மக்களுக்கு எடுத்துரைத்தார்.