ஒசூரில் இரு வேறு இடங்களில் லேப்டாப் திருடிய 4 பேர் கைது; 2 லேப்டாப்கள், ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல்!

 
laptop

ஓசூரில் இரு வேறு இடங்களில் லேப்டாப் மற்றும் பணத்தை திருடிய 4 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 லேப்டாப்கள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குமுதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த 8ஆம் தேதி ஓசூர் வசந்த நகர் அணுகு சாலை அருகே காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த லேப்டாப் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து தினேஷ், ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் லேப்டாப் மற்றும் பணத்தை திருடியது, திருச்சியை சேர்ந்த முரளி, அருண் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து லேப்டாப் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.  

hosur

இதேபோல், ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்னை அம்பத்துரை சேர்ந்த கதிவரன் என்பவரது பையில் இருந்த  லேப்டாப் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கதிரவன் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் திருச்சியை சேர்ந்த கார்வண்ணன், முருகானந்தம் ஆகியோர் கதிரவனிடம், லேப்டாப் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து லேட்பாப் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.