தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது; ரூ.4.25 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்!

 
tenkasi

தென்காசி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.4.25 லட்சம் கள்ளநோட்டுகள் மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன் மற்றும் தென்மண்டல ஐஜி  தனிப்படை உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன், தலைமை காவலர் கண்ணன் உள்ளிட்டோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த மணிச்செல்வன்(28), செங்கோட்டை பெரியபிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(24) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களை சோதனையிட்டபோது ரூ.1.20 லட்சம் மதிப்பிலான  4 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, கஞ்சா மற்றும் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

arrested

இதேபோல், செங்கோட்டை அடுத்த பெரியபிள்ளை வலசை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் புளியறை அடுத்த தெற்குமேடு ஆர்.சி.தெருவை சேர்ந்த பிரகலாதன், விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.