சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை... திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

 
dgl

திண்டுக்கலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 திண்டுக்கல்  கிழக்கு ஆரோக்கியமாதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்(32). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த  15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். இதற்கு வினோத் உடன் பணிபுரிந்த சாமியார் தோட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது மனைவி கவிதா(37) உடந்தையாக செயல்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்,  திண்டுக்கல் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வினோத், கவிதா ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.

judgement

அப்போது,  குற்றவாளி வினோத்துக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366, 368 பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 6-ன் படி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.  மேலும், வினோத்துக்கு உடந்தையாக செயல்பட்ட கவிதாவுக்கு 10 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.