தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த 5 வயது சிறுவன்... பசியால் உயிரிழந்த சோகம்

 
dead

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம்  வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவர் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இவரது தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார், இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

vilupuram

மேலும், இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சிறுவனின் புகைப்படத்தை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். எனினும் உயிரிழந்த சிறுவன் யார் என்ற தகவல் தெரியவில்லை. மேலும்,  சிறுவன் கொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி உள்ளது.

அதில், சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறுவன் பசியால்  உயிரிழந்து இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, உயிரிழந்த சிறுவனை அடையாளம் காண்பதற்காக கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். பட்டினியால் பச்சிளம் சிறுவன் உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.