மதுரை ரயில் நிலையத்தில் 50 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
mdu mdu

மதுரைக்கு ரயிலில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்ற 2 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் நேற்று காலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, அந்த ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்திவரப்படுகிறதா? என ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2-வது நடை மேடையில் மூட்டைகளுடன் நின்றிருந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், மூட்டைகளை பிரித்து சோதனையிட்டனர்.

madurai

அப்போது, சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 50 கிலோ அளவிலான  குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தியது தொடர்பாக தென்காசி பொய்கை மேடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி(33), பசும்பொன்(23) ஆகியோரை கைது செய்தனர்.