5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
கோவை மாவட்டம் அன்னூரில் 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மாணிக்க சுந்தரம் (47) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த நிலையில், அவர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆசிரியர் மாணிக்க சுந்தரம், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, ஆசிரியர் மாணிக்க சுந்தரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


