கோவை அருகே பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியில் 6 வயது பெண் யானை உயிரிழப்பு!

 
elephant

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை அடர் வனப்பகுதி மற்றும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காப்புக்காட்டில் இருந்து  சுமார் 60 மீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

sirumugai forest

அப்போது, உயிரிழந்தது பெண் யானை என்றும், அதற்கு சுமார் 6 வயது இருக்கும் என்றும் தெரிய வந்தது. இது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலை நேரம் என்பதாலும், அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், இன்று மாவட்ட வன அலுவலர் தலைமையில் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர், இறந்த பெண் யானை குட்டிக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னரே யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 8 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.