பவானியில் வேனில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இளைஞர் கைது!

 
ration rice

ஈரோடு மாவட்டம் பவானியில் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வேனில் கடத்திச்சென்ற 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக கர்நாடக மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காகவும் ரேஷன் அரிசியை கடத்தி செல்லும் கும்பலை ஈரோடு குடிமை பொருள்  குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை போலீசார், ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கைது செய்தும், வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு குடிமைப்பொருள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் பவானி கூடுதுறை அருகே வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

arrest

வேனில் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த விமல்குமார் (22) என்பதும், பெருந்துறையில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு  ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து விமல்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், விமல்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.