தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 604 மனுக்கள் பெறப்பட்டன!

 
dd

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  75 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் விதமாக ஆட்சியர் திவ்யதர்ஷினி, 5 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார். 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பட்டா - சிட்டா மாற்றம், பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய மின்இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள், 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

dd

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதனை வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிடுமாறு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து, சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மகளிர் உள்ளிட்ட 75 பேருக்கு  தலா 6 ஆயிரம் வீதம், 4.5 லட்சம் மதிப்பிலான 75 மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கும் விதமாக, இந்த கூட்டத்தில் ஆட்சியர் திவ்யதர்ஷினி, 5 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

இந்த குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமுக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாச சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.