ஈரோட்டில் சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் 6-வது பொதுக்குழு கூட்டம்!

 
erode

ஈரோட்டில் நடந்த கிறிஸ்தவ ஊழியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அரசின் தொண்டு நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஈரோட்டில் சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின 6ஆம் ஆண்டு வருடாந்திர பொதுக்குழு கூட்டம் ஈரோடு நாடார் மேட்டில் உள்ள பெத்தானியா திருச்சபையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் பேராயர் ஞானப்பிரகாசம் துவக்கி வைத்தார். இதில், கூட்டமைப்பின் தேசிய தலைவரும் பெத்தானியா திருச்சபையின் பேராயருமான ஜென்சன் ஜெபராஜ், தேசிய சட்டத்துறை செயலாளர் பால் விக்டர், சிறுபான்மை மக்கள் நலக் கட்சி தேசிய தலைவர் பேராயர் சாம் இயேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், மத்திய அரசு கம்பேஷன் இன்டர்நேஷனல் என்ற இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கிவைத்து உள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான ஏழை மக்கள், குழந்தைகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், எனவே மத்திய அரசு இதுபோன்ற கட்டுப்பாடுகளை தளர்வு செய்து தொண்டு நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை  எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக முதல்வராக பதவியேற்று, கொரானா இரண்டாம் அலையை சிறப்பாக பணியாற்றி கட்டுப்படுத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

erode

மேலும், தமிழகத்திலுள்ள திருச்சபைகளுக்கு, சிலரது தவறான தகவல்களை வைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் திருச்சபை நடத்தவிடாமல் தடுப்பதை முதல்வர் மற்றும் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலையிட்டு கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பினை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன், கிறிஸ்தவர்களுக்கு என்று அனைத்து மாவட்டங்களிலும் தனி கல்லறை ஏற்படுத்தி தரவும், சமூக ஊடகங்களில் மற்றும் இணையதளத்திலும் கிறிஸ்தவர்கள் பற்றிய தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராயர் ஜென்சன்ஜெபராஜ், சட்டத்துறை செயலாளர் பால் விக்டர் ஆகியோர் கூறியதாவது: சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் மத்திய, மாநில அரசிடம் கிறிஸ்தவர்களின் தேவைகள், உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு சென்று அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், தேவாலயங்கள் நடத்துவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த கூட்டமைப்பு செயல்படும். இந்த கூட்டமைப்பில் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நெல்சன், சென்னை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரபாகர், டேனியல் கார்த்திக், லயோலா கல்லூரி சட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் சட்ட ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்றனர்