7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்

 
mbbs

மருத்துப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 மாணவ - மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையிலேயே, மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களும் சேர வேண்டும் என்ற நோக்கில் கடந்தாண்டு அவர்களுக்கு என்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. 

இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவ - மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டனர். 4 மாணவிகள் பல் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான இடம் கிடைத்தது. இதில் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் படித்த ராஜசேகர் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதைப்போல், கள்ளிப்பட்டி அரசு பள்ளியில் படித்த மோகனந்தசாமி என்ற மாணவருக்கு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும், சென்னபுரம் அரசு பள்ளியில் படித்த தமிழரசு என்ற மாணவருக்கு, மதுரை மருத்துவக் கல்லூரியிலும், கவுந்தப்பாடி அரசு பள்ளியில் படித்த மாரியப்பன் என்ற மாணவருக்கு தூத்துக்குடி மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

erode
 
கவுந்தப்பாடி அரசு பள்ளியில் படித்த சுருதவியா என்ற மாணவிக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், பி.மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் படித்த மாணவி கவிபிரியாவுக்கு, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியிலும், தாஸ்யப்ப கவுண்டன்புதூர் அரசு பள்ளியில் படித்த ஹேமவர்ஷினி என்ற மாணவிக்கு, கூடலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பெருந்துறை அரசு பள்ளியில் படித்த மாணவி தாரணாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியிலும்,  குமலன்குட்டை அரசு பள்ளியில் படித்த மாணவர் பரத்குமாருக்கு, வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும், அந்தியூர் அரசு பள்ளியில் படித்த மாணவி மதுமதிக்கு, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும், அரசு பள்ளியில் படித்த மாணவர் குழு பிரசாந்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

இதேபோல், பெருந்துறை அரசு பள்ளியில் படித்த மாணவர் அஜித்துக்கு, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும், வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் படித்த மாணவி ஆனந்திக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியிலும், ஈரோடு ரயில்வே காலனி அரசு பள்ளியில் படித்த மாணவர் தீக்ஷித்துக்கு, கரூர் மருத்துவ கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிப்பதற்கான இடம் கிடைத்தது. மேலும், அந்தியூர் அரசு பள்ளியில் படித்த மாணவி மோனிகாவுக்கு, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், துடுப்பதி அரசு பள்ளியில் படித்த மாணவி சுலேதாபேபிக்கு,  சேலம் பல் மருத்துவக் கல்லூரியிலும்,  மயிலம்பாடி அரசு பள்ளியில் படித்த மாணவி சீலாவுக்கு, கூடலூர் பல் மருத்துவ கல்லூரியிலும்,  கவுந்தப்பாடி அரசு பள்ளியில் படித்த மாணவி மஞ்சுவுக்கு,  கோவை ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியிலும் கிடைத்து உள்ளன.