கோவையில் காரில் கடத்திய 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - இருவர் கைது!

 
cannabis

கோவை துடியலூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கோவை துடியலூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர்கள் பழனியாண்டி, குப்புராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் நேற்று சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகள் கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

arrest

இதனை அடுத்து ரூ.7  லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக காரில் இருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், காளப்பட்டி எல்.என். ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சாந்தன்குமார் (33), அங்கீத் குமார்(19 )ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.