திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 850 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
dgl

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 850 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள டீக்கடையில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் அழகுபாண்டி தலைமையில் வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள நாகம்பட்டி பிரிவு அருகே சாகுல் டீக்கடை பின்புறம் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இவற்றை பதுக்கிவைத்திருந் நசுருதீன்(26) மற்றும் அவரது சகோதரர் நிஜாமுதீன்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை வேடசந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

arrest

இதேபோல், திண்டுக்கல் பிஸ்மி நகரில் உள்ள குறிப்பிட்ட நபரின் வீட்டில் விற்பனைக்காக ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பிஸ்மி நகரை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, 50 மூட்டைகளில் இருந்த 750 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், குட்கா பதுக்கலில் ஈடுபட்ட முகமது யூனிஸை, தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.