ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 89% பேர் செலுத்தி கொண்டுள்ளனர் - சுகாதாரத் துறையினர் தகவல்!

 
vaccine camp

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 89 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டு உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

vaccine

கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இது தவிர 19 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 24ஆம் தேதி வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 14 ஆயிரத்து 956 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 89.27 சதவீதமாகும். இதைப்போல், கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 07 ஆயிரத்து 202 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 66.73 சதவீதமாகும். முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 22 ஆயிரத்து 158 பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர்.