ஆந்திரா, கேரளாவிலிருந்து நாகைக்கு கடத்திவந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் - 9 பேர் கைது

 
nagai

ஆந்திரா, கேரளாவில் இருந்து கார் மூலம் நாகைக்கு கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 170 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக 9 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் விதமாக, மாவட்ட எஸ்.பி ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,  தனிப்படை போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திரா மற்றும் கேரளா பதிவெண் கொண்ட 2 கார்களில் வந்த 9 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

nagai

அப்போது, கார்களில் ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 2 கார்களில்  இருந்தும் 2 கிலோ எடையிலான  85 கஞ்சா பொட்டலங்கள் என 170 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, வேட்டைக்காரனிருப்பை சேர்ந்த பிரபாகரன், சுதாகர், சுதன்ராஜ், ஆந்திராவை சேர்ந்த இருவர் மற்றும் கேரளாவை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

nagai

தொடர்ந்து, அவர்களை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.