பட்டுக்கோட்டை அருகே கோவில்களில் சிலை திருடிய 9 பேர் கைது... 6 சிலைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார்!

 
pattukottai

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில்களில் தொடர்  சிலை திருட்டில் ஈடுபட்ட 9 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 6 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள புராதானேஸ்வரர் - பெரிய நாயகி அம்மன் கோவிலில் சமீபத்தில் சுவாமி சிலைகள் திருட்டு போகின. இதேபோல்,  விளாங்குளம், மேற்குடிகாடு பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் சுவாமி சிலைகள் திருட்டு போகின. இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

pattukottai

பட்டுக்கோட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் காவலர்கள் அருண்குமார், ராகவன், இஸ்மாயில், தியாகராஜன், சுரேந்தர், சச்சிதானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சிலைகளை திருடியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர்கள் சரவணன்(23), சபரிராஜன்(22), நந்தகுமார்(25), மணியரசு(22), பிரபாகரன்(28), வேலவன்(24), அமிர்தராஜ்(24), வினோத்(24), செல்வகணபதி(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஓரு வெள்ளியால் ஆன சுவாமி சிலை, 5 வெண்கல சுவாமி சிலைகள் என மொத்தம் 6 சிலைகள் பறிமுதல்  செய்யப்பட்டது. மேலும், சிலை திருட்டில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.