கொடி கயிறு கழுத்தை இறுக்கியதில் 5-ம் வகுப்பு மாணவர் பலி... மதுரையில் சோகம்!

 
Death

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வீட்டில் விளையாடிய போது கொடி கயிறு கழுத்தை இறுக்கியதில் 5ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் தெருவில் வசித்து வருபவர் துரைப்பாண்டி. கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் விசாகன் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சிறுவன் விசாகன் வீட்டின் உள்ளே விளையாடி கொண்டிருந்தான். இதனால் தாய்  லட்சுமி வீட்டின் வெளிப்புற கதவை சாத்திவிட்டு, வெளியே அமர்ந்துள்ளார். அப்போது, சிறுவன் விசாகன் துணிகளை காய வைக்கும் கொடி கயிற்றை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு விளையாட்டாக சுற்றி உள்ளார்.

madurai gh

அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அவரது கழுத்தை அறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கயிற்றை அவிழ்க்க முயன்றபோது, அது மேலும் இறுகியுள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளான். சிறிது நேரத்திற்கு பின்னர் லட்சுமி, வீட்டிற்குள் சென்றபோது மகன் கழுத்தில் கயிறு இறுக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவன் விசாகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். தகவலின் பேரில்  சுப்ரமணியபுரம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.