தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!

 
dead body

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கலை சேர்ந்தவர் கஜேந்திரன்(43). விவசாயி. இவர் நேற்று காலை கிராமத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார். கஜேந்திரன் நிலத்தின் அருகில் பெருமாள் என்பரது நிலம் உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் புகாமல் தடுப்பதற்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தண்ணீர் பாய்ச்சியபோது, எதிர்பாராத விதமாக மண்வெட்டி மின்வேலி மீது உரசியதில் கஜேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

tenkasi ttn

இதனிடையே, நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, கஜேந்திரன் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துமலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட காஜேந்திரனின் உறவினர்கள், மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கஜேந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தென்காசி ஆர்டிஓ கங்காதேவி, தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மற்றும் போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார், கஜேந்திரனி உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கஜேந்திரனின் மனைவி இலங்காமணி அளித்த புகாரின் பேரில், தோட்ட உரிமையாளர் பெருமாள் மீது ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.