திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை... வரதட்சணை கொடுமையால் சோகம்!

 
suicide

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி ஓட்டுநர். இவரது மகள் வசுமதி(23). இவர் பொறியியல் படித்துள்ளார். இந்த நிலையில், வசுமதிக்கு, நாமக்கல் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் (31) என்பருடன், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், தன் மீது கணவர் சந்தேகப்படுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

salem

இதனால் தந்தை அத்தியப்பன், வசுமதியை திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தந்தை வீட்டில் இருந்து வந்த வசுமதி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வசுமதியின் தந்தை அத்தியப்பன் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு போலீசார், வசுமதியின் கணவர் வினோத், அவரது தந்தை சுப்பிரமணி, தாய் அமுதா, சகோதரி காவியா ஆகியோர் மீது வரதட்சணை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், திருமணமான ஒரு மாதத்தில் வசுமதி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.