கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் ஒற்றை யானை... யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

 
wild elephants

கோவை மாவட்டம் பேரூர் தீத்திப்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பேரூர் தீத்திபாளையம் கிராமம் குட்டைத்தோட்டம் பகுதியில் உள்ள தாமோதரன் என்பவரது தோட்டத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, யானைக் கூட்டம் அவரது வீட்டின் கதவுகளை உடைத்து, அங்கிருந்த உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்களை சேதப்படுத்தியது.

elephant

தொடர்ந்து, அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சுற்றித்திரிந்த யானைக்கூட்டம் அதிகாலையில் காளாம்பாளையம் பகுதியில் இருந்து மலை பகுதிக்கு புறப்பட்டு சென்றன. அப்போது, கூட்டத்தில் இருந்த காட்டுயானை ஒன்று வழி தவறி வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அச்சமடைந்த  அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

elephant

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமுடன் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.