உதகை அருகே கார் மீது லாரி மோதி விபத்து... கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணி பலி!

 
accident

நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில்  கார் மீது காய்கறி ஏற்றிவந்த லாரி மோதியதில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாண்டஸ் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று உதகையில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் தலைக்குந்தா பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.  இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொல்லேகாலை சேர்ந்த மகாநந்தா(34), அவரது மனைவி லாவண்யா, உறவினர்கள் லிங்கராஜ், ராஜேஷ்வரி ஆகியோர் உதகைக்கு காரில் சுற்றுலா வந்தனர். தலைக்குந்தா பகுதியில் வந்தபோது பனிமூட்டம் காரணமாக மகாநந்தா காரின் மீது எதிரே காய்கறி பாரம் ஏற்றிவந்த லாரி மோதியது. இந்த விபத்தில் மகாநந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ooty

அவரது மனைவி லாவண்யா உள்ளிட்ட 3 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த புதுமந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, விபத்தில் பலியான மகாநந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.