சேலம் அருகே பைக் மீது மினி லாரி மோதி விபத்து - தம்பதி பலி!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த நடுவனேரி ஊராட்சி வேலகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (55). விசைத்தறித் தொழிலாளி. இவரது மனைவி சூரியகலா (45). இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை கார்த்திகை தீபத்தையொட்டி, முருகேசன், தனது மனைவி சூரியகலா உடன் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

மகுடஞ்சாவடி பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, முருகேசன் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் முருகேசன், சூரிய கலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


