தாயுடன் ஓடையை கடந்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்ட நர்சிங் மாணவி பலி... நாமக்கல் அருகே சோகம்!

 
namakkal

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே தாயுடன் ஓடையை கடந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள சிங்களம் கோம்பை கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் - கவிதா தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஜீவிதா (18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று கல்லூரி சென்றுவிட்டு மாலையில் கல்லூரி பேருந்தில் சிங்களம் கோம்பை ஏரி பகுதிக்கு வந்த அவர், பின்னர் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் உள்ள கொக்குபாறை ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றதால், இருவரும் வாகனத்தை தள்ளிக்கொண்டு ஓடையை கடந்துள்ளனர்.

drowned

அப்போது, பாராத விதமாக தாய், மகள் இருவரும் ஓடைநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது, கவிதா சிறிது தொலைவில் உள்ள செடிகளை பிடித்துக் கொண்டு உயிர் தப்பினார். ஆனால் ஜீவிதா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமைப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிங்களம் கோம்பை ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

மேலும், இரவு நேரமாகியதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது. அப்போது, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஜீவிதாவின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து, எருமைபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒடையில் அடித்துச்செல்லப்பட்ட மாணவி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.