ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த ஊராட்சி பணியாளர் மீட்பு!

 
ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் 9 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த ஊராட்சி பணியாளரை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் நேற்று மாலை ஊராட்சி பணியாளர் சங்கர் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று திடீரென சங்கரை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ambur

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர், சங்கரை சுற்றியிருந்த மலைப்பாம்பை, பொதுமக்கள் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட அந்த 9 அடி நீள மலைப்பாம்பை காப்புக்காட்டில் சென்று விடுவிக்கப்பட்டது. ஊராட்சி பணியாளர் மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.