பேரணாம்பட்டில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய நபர் கைது!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலை கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவபிரசாத் தலைமையிலான போலீசார், நேற்று அரவட்லா ஜங்ஷன் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அவரிடம் இருந்து 20 கிலோ அளவிலான குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தியது தொடர்பாக பேர்ணாம்பட்டு உமர் வீதியை சேர்ந்த இக்பால் மகன் முகமது அலி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.