ஊத்தங்கரை அருகே ஏரியில் சடலமாக மிதந்த இளைஞர்; கொலையா? என போலீசார் விசாரணை!

 
dead

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, அவரது உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் வெங்கடேஷ் (19). இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாயக்கனூர் கிராமத்தில் உள்ள அய்யன்குட்டை ஏரியில் நேற்று ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

singarapettai

அதில், சடலமாக கிடந்தவர் வெங்கடேஷ் என தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது, வெங்கடேஷின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் சடலத்துடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கடேஷ் காதலிக்கும் பெண்ணின் உறவினர்கள் அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியல் போராட்டம் காரணமாக நீப்பத்துறை - சிங்காரப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை அடுத்து,  சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.