"கம்போடியாவில் சிக்கியுள்ள மகனை மீட்க நடவடிக்கை வேண்டும்"... நெல்லை ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு!

 
nellai youth

கம்போடியாவில் வேலைக்கு சென்று சிக்கித்தவிக்கும் இளைஞரை மீட்டுதரக் கோரி அவரது தாய் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

நெல்லை மூலக்கரைப்பட்டி காரியாண்டி பகுதியை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி சிதம்பரவடிவு(53). இவர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், தங்களது 2-வது மகன் மகேஷ்(27), கடந்த மாதம் நாகர்கோவிலை சேர்ந்த ஏஜெண்டுகள் ஆண்டுரு அந்தோணி, சிவகுமார் ஆகியோர் மூலம் கம்போடியாவுக்கு டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்கு சென்றார். இதற்காக அவர்களுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் கம்போடியாவில் அவரை சட்டவிரோத கும்பலிடம் வேலைக்கு சேர்த்து விட்டனர். இதுகுறித்து மகேஷ் செல்போன் மூலம் தங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

nellai

அதன் பேரில், நாங்கள் ஏஜெண்டுகளிடம் விசாரித்தோம். அப்போது, மேலும், ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்தால் மகேஷை அழைத்து வருவதாக தெரிவித்தனர். அதன்படி, ரூ.1.5 லட்சம் பணம் கொடுத்த நிலையில், தற்போது மேலும் ரூ. 2 லட்சம் கொடுத்தால் தான் மகேஷை அழைத்து வருவோம் என தெரிவித்து விட்டனர். இதனால் கம்போடியாவில் சிக்கியுள்ள எங்களது மகனை மீட்கவும், அவரை சட்டவிரோத கும்பலிடம் சேர்த்துவிட்ட ஏஜெண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனிடையே, கம்போடியாவில் சிக்கியுள்ள இளைஞர் மகேஷ், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு காணொலி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில், இங்கு என்ன நடக்கிறது என்றே தனக்கு தெரியவில்லை என்றும், டேட்டா என்ரி வேலை என கூறி தவறான வேலைகளை செய்ய சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது  உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றும், எனவே மீட்க அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.