பாப்பாரப்பட்டி அருகே சப்பரம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி!

 
chariot fest

தருமபுரி மாவட்டம் மாதேஹள்ளியில் சப்பரம் விழுந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மாதேஹள்ளி கிராமத்தில் கடந்த13ஆம் தேதி ஸ்ரீகாளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. 18 கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த திருவிழாவின்போது எதிர்பாராத விதமாக சப்பரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் தேரின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த மனோகரன், சரவணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Chariot overturned

மேலும், முருகன், வே.மாதேஷ், பெருமாள் மற்றும் பொ.மாதேஷ் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்தில் பலியான மனோகரன், சரவணன் ஆகியோரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5  லட்சமும், காயமடைந்த 4 பேருக்கு  தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெருமாள் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தேர் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.