அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.29 கோடி வசூல்!

 
tiruvannamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.29 கோடி ரொக்கப்பணம், 228 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில், சிவ பெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சமீபத்தில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி விமரிசையாக நிறைவு பெற்றது. தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

Tiruvannamalai

கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில்  கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, காணிக்கைகளை எண்ணினர். இதில், மொத்தம் உள்ள 86 உண்டியல்களில் முதல் நாளான நேற்று 26 உண்டியல்கள் எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 669 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 228 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 478 கிராம் வெள்ளி ஆகியவையும் கிடைக்கப்பெற்றது. எஞ்சிய 60 உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.