5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி... 3 பெண்கள் உள்பட 4 பேரை கைதுசெய்த போலீசார்!

 
tuti

தூத்துக்குடியில் 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை நேற்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில், திருச்செந்தூர் தனிப்பிரிவு எஸ்ஐ ரகு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.  இதனை அடுத்து, தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

arrest

 அப்போது, பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள கோயிலின் முன் சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்றவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த சித்திரைவேல் மகன் மாரியப்பன் (44),  குழந்தையின் தாய் கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கலைவாணர் மனைவி மாரீஸ்வரி (22), அவரது தாயார் அய்யம்மாள் (40) மற்றும் தூத்துக்குடி 3-வது மைல் திரு.வி.க நகரை சேர்ந்த சங்கர் மனைவி சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்ட விரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.