போலி ஆவணம் தயாரித்து, இறந்தவரின் நிலத்தை விற்க முயற்சி... பெண் உள்பட 5 பேர் கைது!

 
tenk

தென்காசி மாவட்டம் பண்பொழி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் இறந்தவரின் நிலத்தை விற்பனை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு அதே பகுதியில் 38 செண்ட் நிலம் உள்ளது. கணபதி சமீபத்தில் இறந்த நிலையில், அவருக்கு வாரிசுகள் இல்லை. இந்த நிலையில் தேன்பொத்தை பகுதியை சேர்ந்த சேகர் முருகன்(41) என்பவர், கணபதியை நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன், அவரது பெயரில் ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயார் செய்தார். தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி பண்பொழியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று நிலத்தை உடையார் என்பவரது மனைவி செல்லம் (48) என்பருக்கு எழுதி கொடுக்க முயன்றார். பத்திரப்பதிவின்போது கைரேகை வைக்கும்போது, ஆதாரில் அவரது உண்மையான பெயரான சேகர் முருகன் என்பதும், அவரது விபரங்களும் தெரியவந்தது.

arrest

இதனால், போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்றதை அறிந்த சார் பதிவாளர் செல்வகுமார், இதுகுறித்து செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் விசாரணை மேற்கொண்டு, போலி ஆணவம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற சேகர் முருகன், நிலத்தை வாங்க முயன்ற செல்லம் மற்றும் பத்திர பதிவுக்கு சாட்சி கையெழுத்திட்ட ஆறுமுகசாமி, முத்துகுமார் மற்றும் பத்திர எழுத்தர் அழகுதுரை ஆக்யோரை கைது செய்தனர். தொடர்ந்து, 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.