உக்ரைனில் இருந்து திரும்பிய ஈரோடு மாணவியுடன், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி சந்திப்பு!

 
erode

உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள ஈரோடு மாணவி சங்கவியை, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஈரோடு காவேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் கேபிள் சங்கர். அவரது மனைவி சகர்பானு. இவர்களின் மகள் சங்கவி. இவர் உக்ரைனில் உஷார்ட் நேஷனல் மருத்துவ பல்கலைக் கழகத்தில் 6ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு சிக்கிக் கொண்ட மாணவி சங்கவி நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக மீட்கப்பட்ட சங்கவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வந்தடைந்தார். 

erode

இந்த நிலையில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, நேற்று மாணவி சங்கவியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு, மாணவி சங்கவி மற்றும் அவரது பெற்றோர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும், அங்கு சிக்கியிருக்கும் மற்ற மாணவர்களை உடனடியாக மீட்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் தமிழ் நகரை சேர்ந்தவர் மருத்துவர் ராஜ்குமார்.  இவரது மகள் வந்தனா. இவர் உக்ரைனில் உள்ள பிளாக்சீ நேஷனல் யூனிவர்சிட்டி மருத்துவ பல்கலைக் கழகத்தில் 3ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றார். தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் அங்கு சிக்கியுள்ள வந்தனாவை மீட்க அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

erode

இந்த நிலையில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி,  நேற்று மாணவி வந்தனாவின் பெற்றோரை சந்தித்து, மாணவி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மூலம் செய்வதாக உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக மாவட்ட தலைவர் எஸ்.ஏ. சிவசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் குரு குணசேகரன்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.