கோவையில் திமுக போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்... போஸ்டர்களை கிழித்தவர்கள் கைதுசெய்த போலிசார்!

 
bjp

கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டு உள்ள திமுக போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்கள், அரசு அலுவலகங்கள், மேம்பால தூண்கள் போஸ்டர் ஒட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதுதொடர்பாக, அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஆட்சியர் சமீரன், 10 நாட்களுக்குள் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

bjp

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில், முதல்வர் கோவை வருகையை முன்னிட்டு திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருந்துள்ளன. இந்த நிலையில், நேற்று இரவு மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டு உள்ள திமுக போஸ்டர்களை அகற்ற வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவினர் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுக போஸ்டர்களை கிழத்தெறிந்ததுடன், திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து, போஸ்டர்களை கிழித்த நபர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.